மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா உத்தபுரம் கிராமத்தில் காவல்துறையின் கெடுபிடிகளும் அடக்குமுறைகளும் நீடித்து வருகிறது. ஏராளமான அப்பாவி மக்கள் மீது போடப்பட்ட வழக்குகள் காரணமாக ஆண்கள் யாரும் ஊருக்குள் நுழைய முடியவில்லை.
இந்நிலையில் 22 வயது இளம் பெண் அகால மரணமடைந்ததையொட்டி அப்பெண்களின் தந்தையோ உற்றார் உறவினரோ வர இயலாத நிலையில் தலித் பெண்களே முன்நின்று அடக்கம் செய்த துயரமான சம்பவமும் நடந்துள்ளது.
கடந்த அக்டோபர் முதல் நாள் 60 தலித் பெண்கள் உள்பட ஏராளமான பெண்கள் எவ்விதமான நியாயமான காரணமுமின்றி கைது செய்யப்பட்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் முயற்சிகளாலும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் பி.மோகன் தலையீட்டாலும் அவர்கள் 2ம்தேதி காலையில் விடுவிக்கப்பட்டனர். ஆயினும் பெண்கள் கைது செய்யப்படுவதற்கு முன்பாக தலித் பெண்கள் காவல்துறையினரால் மிருகத்தனமாக தாக்கப்பட்டுள்ளார். ஒரு பெண்ணின் மர்ம உறுப்பில் காவலர் ஒருவர் லத்தியால் குத்தி காயப்படுத்திய இழி செயலும் நடந்துள்ளது.
இவர்களுக்கு அரசு தரப்பிலோ, காவல்துறை தரப்பிலோ குறைந்தபட்ச மருத்துவ வசதி கூட செய்துதரவில்லை. உத்தபுரத்திற்குள் காயமடைந்த பெண்களுக்கு மருத்துவம் செய்ய தனியார் மருத்துவர்களையும் காவல்துறையினர் அனுமதிக்கவில்லை. மேலும், தலித் மக்களுக்குச் சொந்தமான பல வீடுகள் தாக்கப்பட்டு பொருட்கள் சூறையாடப்பட்டுள்ளன. சில வீடுகள் பெருத்த சேதமடைந்துள்ளன. பல வீடுகளில் கட்டில், டி.வி. போன்ற விலை உயர்ந்த பொருட்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. ஒரு டீக்கடையும் அடித்து நொறுக்கப்படுள்ளது.
மார்க்சிஸ்ட் கட்சி – தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் போராட்டங்களால் தமிழக அரசு தலையிட்டு உருவாக்கிக் கொடுத்த பாதையில் உள்ள தலித் மக்களின் வீடுகளும் சொத்துக்களும் பெருமளவு சேதப்படுத்தப்பட்டுள்ளன. இவை குறித்த புகார்கள் மேல் அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. காவல்துறையின் இத்தகைய மிருகத்தனமான தாக்குதல்களையும் அத்துமீறல்களையும் வன்மையாக கண்டிக்கிறோம்.
இவ்வளவு அட்டூழியங்கள் நடந்தும் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவரும், மாவட்ட நிர்வாகமும் எந்தவித தலையீடும் செய்யாமல் அலட்சியமாக இருந்து வருவது கண்டனத்திற்குரியது. எனவே, தமிழக முதல்வர்அவர்கள் தாமதமின்றி தலையிட்டு கீழ்காணும் அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
- 1.10.2008ல் தலித் குடியிருப்புக்குள் நுழைந்து தலித் பெண்கள் மீது அத்துமீறித் தாக்குதல் நடத்திய காவல்துறை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- காவல்துறை தாக்குதலில் காயமடைந்த பெண்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
- தாக்குதலில் வீடுகள், சொத்துக்கள் சேதடைந்தவர்களுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும்.
- காவல்துறையின் தேவையற்ற கெடுபிடிகளை நிறுத்தி, தவறான வழக்குகளை வாபஸ் பெற்று ஆண்கள் ஊருக்குள் திரும்ப சகஜ நிலை ஏற்படுத்த வேண்டும்.
- உத்தபுரம் மக்களின் இதர ஜனநாயகக் கோரிக்கையான அரச மரத்தையொட்டிய சுவரை அப்புறப்படுத்தி நிழற்குடை அமைப்பது, தலித் மக்களுக்கு அரச மர வழிபாட்டை உத்தரவாதப்படுத்துவது, தலித் குடியிருப்புகளுக்குள் செல்லும் சாக்கடையை ஊருக்கு வெளியே திருப்பி சாக்கடையை ஸ்லாப் போட்டு மூடுவது போன்ற இதர கோரிக்கைகளையும் அவசர உணர்வுடன் தாமதமின்றி தலையிட்டு நிறைவேற்ற வேண்டும்.
- தலித் மக்களுக்காக தமிழக அரசு தலையிட்டு திறந்து வைத்த பொதுப்பாதையை பயன்படுத்த விடாமல் பலமுறை வன்முறைகளை ஏவிவிட்ட ஆதிக்க சக்திகளை வன்கொடுமை பிரிவுகளின் கீழ் தாமதமின்றி கைது செய்து வேண்டும்.
மேற்கண்ட கோரிக்கைகள் மற்றும் பிரச்சனைகளுக்கு உரிய முறையில் தாமதமின்றி தீர்வு காணுமாறும் அதன் மூலம் உத்தபுரம் வட்டாரத்தில் ஜனநாயகப் பூர்வமான சூழலையும், சமூக நீதியையும் நிலைநாட்டுமாறு கேட்டுக் கொள்கிறோம். இந்நடவடிக்கைகள் சட்டப்பூர்வ சூழலையும் அமைதி மற்றும் நல்லிணக்கத்தையும் உருவாக்க உதவும் என்பதை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு வந்து காலதாமமில்லாமல் தலையிட வலியுறுத்துகிறோம்.